பிரான்சில் குறைந்த முதலீட்டில் சுயமாகத் தொழில் தொடங்க விரும்புகின்றீர்களா? பிரெஞ்சு அரசின் Auto-Entrepreneur (தற்போது Micro-entreprise) முறைமையானது, மிக எளிய வரி நடைமுறைகளுடன் சுயதொழில் தொடங்க சிறந்த வாய்ப்பளிக்கிறது. உணவக டெலிவரி, கைவினைத் தொழில், கணனிச் சேவைகள் மற்றும் ஆலோசனைத் தொழில்கள் வரை பல துறைகளில் இத்திட்டம் மூலம் தடம் பதிக்க முடியும்.
- தொழில் வாய்ப்புக்கள் (Secteurs d’activité)
சுயதொழில் முனைவோராகப் பின்வரும் முக்கிய துறைகளில் பதிவு செய்யலாம்.
- சேவை மற்றும் டெலிவரித் துறை (Presentations de Service / Delivery): UberEats, Deliveroo போன்ற உணவு விநியோகம், மொழிபெயர்ப்பு, வடிவமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பச் சேவைகள்.
- வர்த்தகத் துறை (Achat / Vente): பொருடக்களை வாங்கி விற்பனை செய்யும் வணிகம்.
- கைவினைத் துறை (Artisanat): கட்டிட வேலைகள், மின்சாரப் பராமரிப்பு, அழகுக் கலை மற்றும் தையல் கலை. (குறிப்பு: சில கைவினைத் தொழில்களுக்குத் தகுந்த பட்டயச் சான்றிதழ் அவசியமாகும்.)
- ஆன்லைனில் பதிவு செய்யும் படிமுறைகள் (Guichet Unique)
தற்போது அனைத்துச் சுயதொழில் பதிவுகளும் பிரெஞ்சு அரசின் INPI Guichet Unique இணையத்தளம் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன.
- கணக்குத் தொடங்குதல்: formalites.entreprises.gouv.fr தளத்தில் கணக்குத் தொடங்கி உங்கள் தொழிலின் வகைப்பாட்டைத் (Activité) தேர்வு செய்யவும்.
- ஆவணங்கள் பதிவேற்றம்: கடவுச்சீட்டு அல்லது செல்லுபடியாகும் ரெசிடென்ஸ் கார்டு (Carte de Séjour – தொழில் செய்ய அனுமதிப்பது) மற்றும் முகவரிச் சான்றை இணைக்க வேண்டும்.
- SIRET எண் பெறுதல்: பதிவு முடிந்த சில நாட்களில் INSEE அமைப்பிடம் இருந்து உங்களது தொழிலுக்கான 14 இலக்க SIRET எண் வழங்கப்படும்.
- வரி செலுத்தும் முறைகள் மற்றும் URSSAF பங்களிப்பு
Auto-Entrepreneur அமைப்பின் மிகப்பெரிய சிறப்பு அம்சமே, “வருமானம் இல்லையென்றால் வரியும் இல்லை” என்பதாகும்.
- URSSAF சமூகக் கட்டணம்: நீங்கள் ஈட்டும் மொத்த வருமானத்தில் (Chiffre d’Affaires) குறிப்பிட சதவீதம் (சேவைத் துறைக்குச் சுமார் 21.1% முதல் 21.2% வரை, வர்த்தகத் துறைக்குச் சுமார் 12.3%) மாதந்திரமாக அல்லது 3 மாதங்களுக்கு ஒருமுறை URSSAF அமைப்பிற்குச் செலுத்த வேண்டும்.
- வருமான வரி (Versement Libératoire): விருப்பப்பட்டால்,வழக்கமான வரித் தாக்கலுக்குப் பதிலாக ஒவ்வொரு மாதமும் வருமானத்தில் 1% முதல் 2.2% வரை நேரடியாக வரியாகச் செலுத்தும் முறைமையையும் தேர்வு செய்யலாம்.
உங்கள் வழக்கமான வேலைக்கு இடையிலும் பகுதி நேரமாக இச்சுயதொழிலை சட்டபூர்வமாகச் செய்ய முடியும்.
அதிகாரபூர்வ அரசு இணையத்தள இணைப்புகள்:
- INPI Guichet Unique (சுயதொழில் பதிவுத் தளம்): formalites.entreprises.gouv.fr
- URSSAF Auto-Entrepreneur (மாதாந்திர அறிக்கை மற்றும் செலுத்துகை): autoentrepreneur.urssaf.fr
- Service-Public (Micro-Entreprise சட்ட வழிகாட்டி): service-public.fr – Micro-entrepreneur
