நேற்று கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ஹோமரின் ஓடிஸியை நானும் ஜீவியும் திரையரங்கில் சென்று பார்த்தோம். அதி அற்புதமான திரை அனுபவத்தையும் அதற்கீடான ஆழமான சிந்தனை அருட்டல்களையும் கொடுக்கக் கூடிய திரைப்படம் அது. நோலன் போன்ற படைப்பாளரின் கையில் ஓடிஸி போன்ற இதிகாசங்கள் சென்று சேரும்போது அதன் சாகசங்களைத் தாண்டிய தத்துவச் சிந்தனைகளும் திரையில் தத்ரூபமாகி விடுகின்றன.
இதாக்கா நாட்டு அரசன் ஓடிஸியஸ் பத்து வருடங்கள் நீண்ட டிராய் யுத்தத்துக்குப் பின்னர் தன் படையினரோடு அவனது நாடுக்குத் திரும்பும் பயணத்தை ஆரம்பிக்கிறான். வழமையாக இரண்டு மூன்று வாரங்களே எடுக்கக் கூடிய அந்தக் கப்பல் பயணம் பல்வேறு காரணங்களால் பத்து வருடங்கள் இழுபடுகிறது. அந்த மிக நீண்ட ஊர் திரும்பும் பயணத்தைப் பேசும் இலக்கியம் தான் ஓடிஸி. மூவாயிரம் வருடங்களுக்கு முன்னர் ஹோமர் இயற்றியது. மகாபாரதம், இராமாயணம், இதே ஹோமர் எழுதிய இலியட் போன்ற ஏனைய இதிகாசங்களின் கதைகள் பலவும் ஒரு உச்சப் போரினை நோக்கியதாக அமைந்திருக்கையில் ஓடிஸி அவ்வகைப் போருக்குப் பின்னரான மிக நீண்ட பயணத்தை மூலக்கதையாகக் கொண்டிருக்கிறது. பழம்பெரும் இலக்கியங்களுள் ஓடிஸிக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்துக்கான பல காரணிகளுள் இதுவும் ஒன்று.
நவீன இலக்கியத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படும் நுட்பங்கள் பலவும் ஓடிஸியில் உண்டு . மூலக் காவியத்தில் அதன் முதன்மைப் பாத்திரமான ஓடிஸியஸ் உள் நுழையவே பல அத்தியாயங்கள் பிடிக்கும். அதுவரை அனைவரும் ஓடிஸியஸைப் பற்றிப் பேசிப் பேசி உரு ஏற்றிக் கொண்டிருப்பார்கள். ஓடிஸியஸ் ஒரு இலட்சிய நாயகன் கிடையாது. அவன் ஒரு நம்பகத்தன்மை இல்லாத கதை சொல்லி (unreliable narrator) ஆவான். இக்காப்பியத்தின் கதை ஒரு நேர்கோட்டில் பயணிக்காது. நமக்குத் தெரிந்த இலக்கிய மரபில் non linear கதை சொல்லலை மிகத் தொடக்கக் காலத்திலேயே கையாண்ட பெரும் படைப்பாளிகளில் ஹோமரும் ஒருவர். அவரின் காட்சிப்படுத்தல்களும் கூட காலத்திற்கும் நிலைப்பவை. கதையின் ஓரிடத்தில் ஓடிஸியஸும் அவனது வளர்ப்பு நாயும் இருபது வருடங்கள் கழித்துச் சந்திக்கிறார்கள். ஓடிஸியஸ் அப்போது மாறுவேடத்தில் அங்கு நிற்கிறான். ஊரே அவனை யார் என்று மட்டுக்கட்டவில்லை. ஆனால் அந்த நாய் கண்டுபிடித்து விடுகிறது. வயோதிபத்தின் இயலாமையினால் நாயினால் தன் வாலைக் கூட ஆட்ட முடியவில்லை. அது அப்படித் தடுமாறுகிறது என்று தெரிந்தும் ஓடிசியஸால் அதனருகே சென்று அதனைத் தடவிக் கொடுக்க முடியவில்லை. நோலன் இக்காட்சியைச் சற்று இலகுபடுத்தியிருப்பார். ஆனால் மூல இலக்கியத்தில் அக்காட்சி ஒருவித செக்கோவியன் தன்மையான காட்சியாக மிளிரும். தமிழில் புதுமைப்பித்தனோ அசோகமித்திரனோ கையாளுகின்ற நுணுக்கங்கள் அவை. மூவாயிரம் வருடங்களுக்கு முன்னர் ஹோமர் முயன்றிருக்கிறார்.
ஓடிசியஸும் அவனது படையினரும் தம் பயணத்தில் வழிதவறி ஒரு தீவில் கரை ஒதுங்குகிறார்கள். அந்தத் தீவில் தாமரைப் பழங்களை உண்ணும் மனிதர்கள் வாழ்கிறார்கள். அவர்கள், ஓடிஸியஸின் சகாக்களுக்கும் அந்தத் தாமரைப் பழங்களை உண்ணக் கொடுக்கிறார்கள். அப்பழங்கள் விசித்திரமானவை. அவை, உண்பவரின் நினைவுகளை மழுங்கடிக்க வல்லவை. அவர்கள் மனதினுள் கொண்டிருக்கும் தீவிரத்தையும், அச்சத்தையும், பதற்றத்தையும் நீர்த்துப் போகச் செய்யும். சொல்லப் போனால் அவை ஒருவித antidepressants நிவாரணிகள். அக்கணத்தில் வாழும் வாழ்க்கையை அவை இனிதாக உணர வைக்கும். அதை உண்ணும் ஓடிஸியஸின் சகாக்களுக்கு ஊர் பற்றிய நினைவுகள் மறைந்து போகின்றன. ஊரில் அவர்களுக்காகக் காத்திருக்கும் குடும்பங்களைப் பற்றிய எண்ணங்கள் தொலைகின்றன. இங்கேயே மகிழ்ச்சியாகத்தானே இருக்கிறோம்? இப்போது ஊருக்குப் போய் என்னதான் செய்வது? என்று அவர்கள் ஓடிஸியஸோடு திரும்பவும் பயணம் செய்ய மறுக்கிறார்கள். ஓடிஸியஸ் அவர்களை வலுக்கட்டாயமாக அள்ளிக் கப்பல்களில் போட்டுக் கொண்டு அங்கிருந்து தப்பியோடுகிறான்.
ஊர் திரும்பும் இலட்சியத்தோடு பயணிப்பவர்கள் நடுவில் கிடைக்கும் பற்றுகளையும், இன்பத்தையும் புறந்தள்ள முடியாது, அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட முடிவெடுக்கிறார்கள் என்கின்ற ஓடிஸியின் இப்படிமம் புலம்பெயர்வுகளால் கூர்ப்படைந்த மனித நாகரிகத்துக்கு வரலாறு முழுதும் பொருந்திக் கொண்டேயிருக்கும். பல இலக்கியங்களில் இவ்வகைப் படிமங்கள் உண்டு. சிலப்பதிகாரத்தில் கோவலனுக்கு மாதவி ஊடாகக் கிடைக்கும் அனுபவமும் அப்படியானது. Life of Pi இன் மிதக்கும் தீவு இன்னொன்று.
பிறந்து வளர்ந்த ஊரை விட்டு, பிற காரணங்களால் புலம்பெயர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மறுபடியும் தம் சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்வதில்லை. என் பெற்றோர் அவர்களது சொந்த ஊரான நயினாதீவிலிருந்து புலம்பெயர்ந்து யாழ்ப்பாணம் சென்றார்கள். மறுபடியும் ஊர் திரும்பவில்லை. என் தலைமுறையினர் பலர் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு, வெளிநாடுகள் என்று புலம்பெயர்ந்தவர்கள். அவர்களும் ஊர் திரும்பவில்லை. நானும் கொழும்பு, சிங்கப்பூர், அவுஸ்திரேலியா என்று புலம்பெயர்ந்தேன். ஊர் திரும்பவில்லை. காரணம் சென்ற ஊர்களில் நாம் அனைவரும் கண்டடைகின்ற தாமரைப் பழங்கள். ஓடிஸியஸின் குழுவினராவது தற்செயலாகத்தான் அத்தீவுக்குச் செல்கிறார்கள். ஆனால் நாம் பல சமயங்களில் தாமரைப் பழங்களுக்காகவே தீவுகளைத் தேடி அலைகிறோம்.
மூல இலக்கியத்தின் இந்தப் பகுதியை நோலன் தன் படத்தில் கலிப்ஸோவின் அத்தியாயத்தோடு இணைத்து விடுகிறார். ஓடிஸியஸ் மீது காதல் கொள்ளும் தெய்வப் பெண்ணான கலிப்ஸோ, தாமரை மலர்களைக் கொடுத்து வசியப்படுத்தி தன் கட்டுக்குள்ளேயே அவனை ஏழு வருடங்கள் வைத்திருக்கிறாள். ஓடிஸியஸும் தான் வந்த நோக்கத்தை மறந்து அவளோடு இன்புற்றிருக்கிறான். ஆனால் அவ்வப்போது தின்ற மலர்கள் செரித்து வீரியம் குறைந்தால் இவனுக்குச் சன்னமாக ஊரின் ஞாபகங்கள் வந்து சேரும். அவன் அப்போது கரையொதுங்கிய படகின் எச்சங்களை ஒன்று சேர்த்து நினைவுகளை ஒருமைப்படுத்த முயற்சி செய்வதுண்டு.
சொந்த ஊரை விட்டுப் பிரிந்து வந்து முப்பது, நாற்பது வருடங்கள் கழிந்த பின்னரும் ஊரை நினைத்து அழுந்தும் இக்காட்சி, சமூகத்துக்குப் புதிதல்ல. புலம்பெயர் வாழ்வு நமக்குக் கனிந்த தாமரைப் பழங்களை ஊட்டி விடுகிறது. வேலை, வீடு, குடும்பம், குழந்தைகள், மருத்துவம், யுத்தமற்ற சூழல், மாசக் கடைசியிலும் மீதமாகும் வருமானம் என்று பல்வேறு வசதிகள். எல்லாமே அந்தத் தாமரை இதழ்கள்தாம். பலருக்கு நாற்பது, ஐம்பதுகளில் அந்தத் தாமரை மலர்கள் கொஞ்சம் கொஞ்சமாகச் செயல் இழக்க ஆரம்பிக்கின்றன. குழந்தைகள் வளர்ந்து தம் வழியில் போய் விடுவார்கள். முழு நேரமும் வேலை செய்துதான் சம்பாதிக்க வேண்டிய சூழல் வீட்டிலிருக்காது. வீட்டுக்கடன் இருக்காது. ஆக இப்போது தாமரை மலர்கள் திகட்ட ஆரம்பிக்கும். ஊர் நினைவு மேலும் பெருகும். அதனாலேயே பலர் உடைந்த மரத்துண்டுகளைக் கட்டிக் கொண்டு ஊர் திரும்புகிறார்கள்.போகும்போது அந்தத் தாமரை இதழ்களும் டொலர்களிலும், பவுண்டுகளிலும், யூரோக்களிலும் கூடவே ஊருக்குப் போகின்றன.
ஊரில் வாழ்ந்த காலத்தை விட அதிகமாகப் புலம்பெயர் நிலத்தில் கழித்த இம்மனிதர்கள் அப்படி ஏன் ஊரை நோக்கி ஓடுகிறார்கள்?
முக்கிய காரணம் அவர்களின் மூளை முழுவதும் ஊரில் வாழ்ந்த காலத்தின் நினைவுகள் பெரும் கருங்கல்லைப் போல அடைத்து நிற்கின்றன. அதற்குள்ளே புதிய நினைவுகள் ஏதும் சென்று சேருவதில்லை. இன்னொரு காரணம் சற்று நூதனமானது. தாமரைகளை உண்ணும் ஊரில் ஓடிஸியஸ் என்பவன் வழியின்றி வந்தடைந்த ஒரு கப்பல் பயணி. அங்கே அவன் ஒரு சாதாரண மனிதன் மட்டுமே. ஆனால் சொந்த ஊரில் ஓடிஸியஸ் அரசனாக இருந்தவன். அவன் வளர்த்த நாய் வயோதிபமானாலும் அவனைக் கண்டு வாலாட்டுகிறது. அவனுடைய காதலி மற்றவரை மறுத்து அவனுக்காகக் காத்திருக்கிறாள். பத்து வருடங்கள் உணவுக்கே அல்லற்பட்டு உடல் நலிந்து போனாலும் ஊர் சேர்ந்துவிட்டால் அவன் வீரனாகி விடுகிறான். பத்து வருடங்கள் பயிற்சி இல்லாவிட்டாலும் ஏழு மலை, ஏழு கடல், ஏழு மரம் ஊடு அம்பு பாய்ச்சும் வித்தை தெரிந்த வில் வீரனாக மிளிர்கிறான். ஊரின் கோயில் திருவிழாக்களில், சாமத்திய வீடுகளில், திருமண மண்டபங்களில், பாடசாலைகளில் இன்னமும் வண்டியைத் தள்ளிக் கொண்டு நிற்கும் அந்த ஐம்பதுகளின் மனிதர்களை உற்று நோக்குங்கள். அவர்களில், கொஞ்சமே ஓடிஸியஸை நீங்கள் கண்டுணரலாம்.
இப்புள்ளியில்தான் நோலனின் படைப்புத்திறன் சிலிர்க்க வைக்கிறது. மூல இலக்கியத்தில் ஓடிஸியஸ் ஊர் திரும்பி மறுபடியும் அவனது மனைவியான பெனிலுப்பியோடு சேர்கிறான். வீடு திரும்புதல்தான் அந்த இலக்கியத்தின் முற்றுப்புள்ளி. ஆனால் நோலன் அதிலும் சின்ன மாற்றம் ஒன்றைச் செய்திருக்கிறார். திரைப்படத்திலும் ஓடிஸியஸ்பெனிலுப்பியோடு சேர்கிறான்தான். ஆனால் அவன் இதாக்காவிலேயே தங்கி விடவில்லை. அவனும் மனைவியும் மறுபடியும் கப்பல் கட்டிக் கொண்டு அமைதியைத் தேடி மேற்குத் திசை நோக்கிப் பயணிக்கிறார்கள்.
புலம்பெயர்வு என்பது பல சமயங்களில் கூட்டிலிருந்தான ஒரு பறவையின் விடுதலையைப் போன்றது. ஊரும், அதன் மனிதர்களும், அவை கொடுக்கும் நினைவுகளும் அற்புதங்கள்தாம். ஆனால் ஊரை விட்டுப் பிரிந்து உலகை அனுபவிக்கத் தெரிந்த பின்னர் ஊரை மறுபடியும் ஏகுதல் என்பது பலருக்கும் இயலாதது. ஊருக்குத் திரும்ப முடியும். அனால் அங்கேயே நிலைத்துப் போகமுடியாது. சொல்லப் போனால் பயணங்களை அனுபவித்தவர்களுக்கு நிரந்தரமாக எந்த ஊரிலும் தங்கும் எண்ணம் வந்து விடுவதில்லை. பற்றுகளும், ஆசைகளும் தாமரை மலர்களாகி ஒரு ஊருக்குள்ளும் ஏன், உறவுகளுக்குள்ளும் கூட நம்மை அடைத்து நிற்கின்றன. அதிலிருந்தான விடுதலை என்பது பேரின்பம். அந்த விடுதலை மனதிடம் நாட்டுப்பற்றோ, மொழிப்பற்றோ, இனம், மதம் என்ற வேறு எந்த பற்றுக்களோ எந்த வசியமும் செய்ய முடியாது. திருவாதவூரர் மாணிக்கவாசகராகும் தருணம் அது. அங்கு கூட இறைப்பற்று என்றொரு தாமரை மலர் உண்டு. பற்றை அறுப்பது அல்ல விடுதலை. பற்றுக்கு அடிமையாகத்திருந்தாலே விடுதலையாகும்.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இலக்கியம் தன்னை மீள எழுதிக் கொள்ளும் புள்ளி இது. இதனைச் சாத்தியமாக்கிய ஹோமருக்கும் நோலனுக்கும் என் பேரன்புகள் உரித்தாகுக.
