மண் பானை நீர் – ரகசியம்

Published:

     ஃப்ரிட்ஜ் தண்ணீரைக் குடிப்பதன் மூலம் உளவியல் ரீதியாக ஒரு விடுபடல் கிடைக்கிறது. தாகம் சீக்கிரம் அடங்கி  விடும். வெப்பமான சூழலில் குளிர்ச்சி யான தண்ணீரைக் குடிக்கும்போது உடலும் குளிர்ச்சியாகும் என்கிற ஒரு உணர்வு  மட்டும்தான் நமக்குக் கிடைக்கும். மற்றபடி அது உடலைக் குளிர்ச்சியாக்குவதில்லை. ஆஸ்துமா போன்ற  தொந்தரவுக்கு ஆளாகியுள்ளவர்களுக்கு ஃப்ரிட்ஜ் தண்ணீர் ஒவ்வாமையை ஏற்படுத்தும். அவர்கள் குளிரூட்டப்பட்ட  தண்ணீரை அருந்துவதைத் தவிர்க்கலாம். 

            ஃப்ரிட்ஜ் தண்ணீர் ஆரோக்கியத்துக்கு உகந்ததல்ல. அது தாகத்தையும் தணிப்பதில்லை. அதனால்தான் இப்போது குளிர்ச்சியான தண்ணீர் வேண்டும் என்று மண்பானையைப் பலரும் உபயோகிக்கிறார்கள்.

        மண்பானை நீர் தாகம் தணிப்பதோடு மட்டுமில்லாமல், உடலில் ஏற்படுகிற பல பாதிப்புகளை குணப்படுத்தும் தன்மையும் கொண்டது. ஆரோக்கியத்துக்கும் உகந்தது. மண் பானை நீர் இயற்கையான முறையில் உடலை குளிர்ச்சியாக்குகிறது. கோடையில் ஏற்படுகிற நா வறட்சி, உடல் நீர் இழப்பு போன்றவற்றைத் தடுக்கிறது. உடலுக்கு நோயை ஏற்படுத்துகிற வாதம், பித்தம், கபம் என்ற மூன்று தோஷங்களையும் சமநிலையில் வைத்திருக்கிறது.

  கோடை காலத்தில் மண்பானை தண்ணீர் குடிப்பதை வழக்கமாக கொண்டவர்கள் சுவை மற்றும் நறுமணத்துக்காக தண்ணீரில் வெட்டிவேர், எலுமிச்சைப்பழம் போட்டு வைப்பார்கள். இவற்றோடு கைப்பிடி அளவு தேற்றான் கொட்டையை சுத்தமான வெள்ளைத்துணியில் கட்டிப் போடுவது அவசியம். இவ்வகை கொட்டை கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமிகளை அழித்து நீரை சுத்தப்படுத்தும். வாரம் ஒருமுறை அல்லது தண்ணீரை மாற்றும்போது, புதிதாக தேற்றான் கொட்டை போட வேண்டும். 

குளிர்ச்சியான நீர் வேண்டும் என்பதற்காக மண்பானையை உபயோகப்படுத்துகிறவர்கள் நாகரிகம் என்ற பெயரில் பெயின்ட் அடித்து உபயோகிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். ஒரு சிலர், பானையின் உட்புறத்திலும் பெயின்ட் அடிக்கின்றனர். இவ்வாறு செய்வது பார்ப்பதற்கு வேண்டுமானாலும் அழகாகத் தெரியலாம். ஆனால், இதனால் மண்பானையின் பயன் எதுவும் கிடைக்காது. மேலும், பானையின் வெளிப்புறத்தில் உள்ள கண்ணுக்குத் தெரியாத சிறுசிறு துவாரங்கள் வழியே நீர்த் திவலைகள் வெளிப்படுவதும் தடைபடும்.         முதல் தடவையாக, மண்பானை நீரை குடிப்பவர்களுக்கு தொண்டை கட்டுதல், சளி மற்றும் மூக்கில் நீர் வடிதல் போன்றவற்றால் அவதிப்பட வாய்ப்புகள் இருக்கின்றன. இந்தப் பிரச்னைகளை எல்லாம் நினைத்து மண்பானை தண்ணீரை தவிர்த்துவிடக் கூடாது.

Related articles

spot_img

Recent articles

spot_img